போன்சாய்
தன்னுலகைத் தவிர்த்து மறு பாதி உலகின் நடைமுறை அறியா
பொருளாதாரத்தின் உச்சத்தில் வாழும் மேல்தட்டு மக்களின்
மெத்தகு மாடி வீட்டின் பாங்கான பால்கனியிலிருந்து
போன்சாய் வைத்தால் அதிர்ஷ்டம் வருமென்ற இலவச வதந்திகளால்
பாதாளம் வரைப் பாயும் வேர்கள்
ஒரு முழுச் சாப்பாடு கொள்ளும் அளவு இலைகள்
பெரிதாகச் சிரிக்கும் மலர்கள்
ஒரு கைக்குள் அடங்காக் கனிகள் என
இயற்கை தந்த வரத்தை இழந்து
சிறுத்த வேர்களோடு அளந்த புன்னகைப் பூக்களோடு
பூதக் கண்ணாடியின் உதவி கொண்டு பார்க்கும் இலையோடு
இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் கனியோடு
எட்டிப் பார்த்தது ஒரு போன்சாய்
சுட்டெரிக்கும் சூரியனனின் கத்திரி வெயிலில்
கொரோனாவின் கைங்கர்யத்தால்
கால் நடைப் பயணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தன் இடம் நோக்கி நடை பயணம் செய்யும் அவலத்தைக் கண்டு
மௌன மொழி பேசியது
உன்னியல்பை விட்டுக் கொடுத்து தன்னிலம் விட்டு பிற நிலம் சென்று
அந்நிலத்தை உயர்த்தி தன்னிலையை உயர்த்திக் கொள்ள
ஓயாமல் உழைத்து உன் அடையாளத்தை நீயும் இழந்தாயோ?
– சௌம்யா
Wonderful thoughts about the Bonsai and the migrant workers……